கார்த்திகை தீப திருநாள்: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூர பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்து இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.
அதேபோல, திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.
இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணைய தளங்களின் மூலமாக, இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 94450 - 14426, திருநெல்வேலி 94450 - 14428, நாகர்கோவில் 94450 - 14432, தூத்துக்குடி 94450 - 14430, கோயம்புத்தூர் 94450 - 14435, சென்னை தலைமையகம் 94450 - 14463 மற்றும் 94450 - 14424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்; 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகள்; 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 35 - 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், 200 தனியார் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.