களைகட்டிய பிக்பாஸ் சீசன் 9 - திவாகர் முதல் பிரவீன் காந்தி வரை போட்டியாளர்கள் விபரம்!

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிரவீன் காந்தி, விஜே பார்வதி, கெமி, கனி, திவாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை கவர்ந்தது ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிறகு கமல்ஹாசன் அரசியல், சினிமா போன்று தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதால் நேரமின்மை காரணத்தால் விலகிய நிலையில், கடந்த ஆண்டு 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் நேற்று (அக்.5) முதல் தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒவ்வொருவருவராக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி அவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் சிகப்பு மற்றும் ஊதா நிற பேட்ஜ்களை கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு இயக்குநர் பிரவீன் காந்தி ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி விமர்சனம் செய்தார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் திவாகர் மருத்துவர் என சக போட்டியாளர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இவ்வாறு அறிமுகமானதில் சக போட்டியாளர்களுக்கு உடன்பாடு இல்லை, ஏனெனில், திவாகர் பிசியோதெரபிஸ்ட் படித்துவிட்டு அதனை மருத்துவர் என எப்படி கூறலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிக் பாஸ் விளையாட்டை பொறுத்தவரை வீட்டில் இருக்கக்கூடிய ஒருவர் மற்றொருவரை எலிமினேஷன் செய்து விளையாட வேண்டும். இந்நிலையில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஒருவருக்கு மற்றவருடைய ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. இனி வரக்கூடிய நாட்களில் பிக் பாஸ் வீட்டில் என்னென்ன நடக்கும், யாரினுடைய முகத்திரை கிழியும், யாரெல்லாம் பிரகாசிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.