தீபாவளி பரிசு பொருட்களுக்கு செலவு செய்ய மத்திய அரசு தடை - புதுவையில் எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சி

தீபாவளி பரிசு பொருட்களுக்கு செலவு செய்ய மத்திய அரசு தடை - புதுவையில் எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சி

தீபாவளி பரிசு பொருட்களுக்கு செல்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலும் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் புதுச்சேரியில் பல எம்எல்ஏ-க்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் அரசியல்வாதிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி முக்கியஸ்தர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம். அதன்படி முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் உள்பட 33 எம்எல்ஏ-க்களுக்கும் அமைச்சரவை செலவில் 'ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை வழங்கி வந்தார்.

இதில், எம்எல்ஏ-க்களுக்கு தலா 500 ஸ்வீட் பாக்ஸ், 500 பட்டாசு பாக்ஸ்களும் அமைச்சர்களுக்கு தலா 1,000 பாக்ஸ்களும் வழங்கப்பட்டன. இந்த ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள், தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு வழங்கி வந்தனர். இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்வீட், பட்டாசுகள் வழங்கப்பட்டு வந்தது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், இந்த தீபாவளி பண்டிகைக்கு 'ஸ்வீட் மற்றும் பட்டாசுகள் கொடுத்து மகிழ்விக்க தற்போதுள்ள எம்எல்ஏ-க்கள் பலரும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் செலவுத் துறை சார்பில் இணைச் செயலர் சிங், அலுவலக குறிப்பாணையை பல்வேறு துறைகள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்: ”அத்தியாவசியமற்ற செலவுகளை கட்டுப்படுத்த நிதி அமைச்சக செலவுத் துறை அறிவுறுத்துல்கள் வெளியிடுகிறது. அதன்படி பொது நிதியை நியாயமான முறையில் பயன்படுத்துவது அவசியம். மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பிற அமைப்புகளால் தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளுக்கு பரிசுகள், பொருட்கள் வாங்க எந்த செலவும் செய்யக் கூடாது இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, மத்திய நிதி அமைச்சக செலவுத்துறை குறிப்பாணை புதுவைக்கும் பொருந்தும். ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ் விவகாரத்தை ஏற்கெனவே துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையில் எடுத்துள்ளார்.

கடந்தாண்டு வழங்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்களுக்கு ரூ.90 லட்சம் மட்டும் ஸ்வீட் வழங்கிய நிறுவனத்துக்கு வழங்க துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அனுமதி அளித்தார். கான்பெட் நிறுவனம் மூலம், தனியார் பட்டாசு நிறுவனத்தில் இருந்து வாங்கி கொடுத்த பட்டாசுகளுக்கான ரூ.4 கோடிக்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அனுமதி தராமல், திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், கான்பெட் நிறுவனத் திற்கு ரூ.4 கோடி வழங்கப்படாமல் உள்ளது.

அதனால் இந்த ஆண்டும் புதுச்சேரி ஆளுநரின் அனுமதி கிடைக்கவில்லை. வரும் தீபாவளிக்கு ஸ்வீட்- பட்டாசு பாக்ஸ்கள் எம்எல்ஏ-க்களுக்கு வழங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கிட்டு, தொகுதியில் உள்ள தங்கள் ஆதரவாளர்களுக்கு தரலாம் என திட்டமிட்டிருந்த பல எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்" என்று அரசு வட்டாரங்கள் கூறியுள்ளனர்.