கிரிக்கெட் ஃப்ளாஷ்பேக்: 3-வது முச்சத உலக சாதனை ‘மிஸ்’... இலங்கையைப் புரட்டி எடுத்த சேவாக்!

கிரிக்கெட் ஃப்ளாஷ்பேக்: 3-வது முச்சத உலக சாதனை ‘மிஸ்’... இலங்கையைப் புரட்டி எடுத்த சேவாக்!

2009ம் ஆண்டில் இதே தினத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது முச்சதத்தை அடித்து உலக சாதனை புரியும் முதல் வீரர் என்ற அரிய மைல்கல்லை, யாராலும் முறியடிக்க முடியாத ஒரு மைல்கல்லை சேவாக் 7 ரன்களில் தவற விட்ட நாள், ஆனாலும் சேவாகின் அந்த அதிரடியையும் இந்தியா இலங்கையை இன்னிங்ஸ் வெற்றி பெற்ற அன்றைய இந்த நாளையும் மறக்கவும் முடியுமா!

மும்பையில் நடந்த 3வது டெஸ்ட் ஆகும் இது. ஏற்கெனவே இந்திய அணி 1-0 என்று முன்னிலைப் பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் இலங்கையை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்களில் வெற்றி கண்டு தொடரை 2-0 என்று கைப்பற்றியதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தோனியின் தலைமையில் இந்திய அணி நம்பர் 1 இடத்திற்கும் முன்னேறியது.

ஆனால் அதன் பிறகு இந்திய அணி இறங்கியதும் நடந்தது ரணகளம், கொலைகளம். அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் 284 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ராகுல் திராவிட் 62 ரன்களுடன் நாட் அவுட்டாக இருக்க இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 443 ரன்களை எடுத்தது, அதுவும் 79 ஓவர்களில். சேவாகின் அடின்னா அடி... மறக்க முடியாத அடி.

மறுநாள் முச்சதம் கண்டு உலக சாதனை நிகழ்த்துவார் என்று மும்பை பிரபர்ன் ஸ்டேடியத்தில் கூட்டம் நெருக்கி அடித்தது. ஆனால் சேவாக், முரளிதரன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய லூப் பந்துக்கு அவரிடமே கேட்ச் ஆகி 293 ரன்களில் வெளியேறினார். முச்சத உலக சாதனை கனவு முடிந்தது.

மொத்தம் 254 பந்துகளைச் சந்தித்த சேவாக் 40 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் பவுண்டரிகளிலேயே இரட்டைச்சதம் எடுத்து நீண்ட காலம் மறக்க முடியாத ஒரு இன்னிங்சை ஆடி ஆட்டமிழந்தார். அன்றைய நாளில் தோனியும் ஒரு சதம் எடுத்தார். தோனி 154 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுக்க இந்திய அணி 726/9 என்று டிக்ளேர் செய்தது.

முரளிதரன் 51 ஓவர்கள் வீசி 195 ரன்கள் விளாசப்பட்டார். ஆனால் சேவாக் உட்பட 4 விக்கெடுகளைக் கைப்பற்றினார். ரங்கனா ஹெராத் 53.3 ஓவர்கள் 240 ரன்கள் விளாசப்பட்டார். வெலெகேதரா 131 ரன்களையும் குலசேகரா 105 ரன்களையும் கொடுத்து சேவாகிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டனர்.இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 309 ரன்களுக்குச் சுருண்டது. சங்கக்காரா அதியற்புதமான 137 ரன்களை எடுத்தார். ஆனால் ஜாகீர் கானின் அட்டகாசமான பவுலிங்கில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தது. சேவாக் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். சேவாக் 284 ரன்களை விளாசிய இந்த டிசம்பர் 4ம் தேதியை மறக்கத்தான் முடியுமா?