தடையை மீறி போராட்டம் - அண்ணாமலை கைது

தடையை மீறி போராட்டம் - அண்ணாமலை கைது

திருப்பூரில் காவல் துறையினரின் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேரும் குப்பைகளை இடுவாய்யை அடுத்த சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் மூன்று பொதுமக்கள் மற்றும் நான்கு போலீசார் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அண்ணாமலை, ”குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மேயர் தினேஷ் குமார் ஊழல் செய்வதற்காகவே குப்பையை சுத்திகரிப்பு செய்யாமல் உள்ளார். எவ்வளவு குப்பை சேர்கிறதோ அவ்வளவு கமிஷன். கமிஷனுக்காகவே குப்பையை அதிகரித்து, மறுசுழற்சி செய்வது கிடையாது.‌ இதற்கு நிரந்தர தீர்வு தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்வோம்.

வடமாநிலத்தவர்களை நாம் கொச்சைபடுத்துகிறோம். ஆனால் அவர்களது நகரம் சுத்தமாக உள்ளது, ஆனால் நம்முடைய ஊர் குப்பை மேடாக உள்ளது. நாளை முதல் காவல்துறையை எப்படி வேலை வாங்க வேண்டுமோ, அவ்வாறு வேலை வாங்கப் போகிறோம். பெண்கள் பாதுகாப்புக்கும், குழந்தைகள் பாதுகாப்புக்கும் காவல் துறை இருக்க வேண்டும் என நினைக்கிறோம். போலீசார் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டும் எங்களுக்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை.

மக்களுடன் நிற்க வந்தால் என்னை கைது செய்கிறீர்கள், கோயம்புத்தூர் மருத்துவமனையில் எனது தந்தையை பார்க்க சென்றாலும் கைது செய்கிறீர்கள். பாலியல் சம்பவத்திற்கு கூட தாமதமான கைது நடவடிக்கை, ஆனால் மக்கள் பிரச்சனைக்காக போராட்டத்தின் போது உடனடியாக கைது செய்வது ஏற்புடையதல்ல.

மேயர் தினேஷ்குமார் வீட்டின் முன்பு குப்பையை கொட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். அதுமட்டுமின்றி ஆளுங்கட்சி ஊராட்சித் தலைவர்கள் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். நாளை முதல் தினமும் புதிதாக பல்வேறு விஷயங்களுக்கு போராட்டம் நடக்கும்.

காவல்துறை செய்த தவறுக்கு நாளை முதல் நாம் சடுகுடு விளையாட்டு விளையாடலாம், திருடன், போலீஸ் விளையாட்டு விளையாடலாம்.‌ இரவு 12 மணிக்கு கூட குப்பையைக் கொண்டு வந்து கொட்டி, நாளை முதல் நாங்கள் யார் என்று காட்டுவோம்” என பேசினார்.

இதனைத் தொடர்ந்து, அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உட்பட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.