கஞ்சா புகை பிடித்ததை காட்டி கொடுத்த சிறுவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

கஞ்சா புகை பிடித்ததை காட்டி கொடுத்த சிறுவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

கஞ்சா புகைத்ததை காட்டி கொடுத்ததால் இரண்டு சிறுவர்களை சரமாரியாக தாக்கிய 4 மாணவர்கள் மீது ஆமத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், போதை புழக்கம் மற்றும் பயன்பாட்டைத் தடுக்க தமிழக காவல் துறை மற்றும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். அதனைக் கண்ட அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள், போதைப் பொருள் பயன்படுத்திய நபர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதனால், கோபமடைந்த அவர்களது பெற்றோர்களும், மாணவர்களை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் 4 பேரும் சேர்ந்து, கஞ்சா புகைத்ததை வீட்டில் தெரிவித்த இரு சிறுவர்களை பழைய குடிநீர் தொட்டி பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி, அந்த சிறுவர்களை தாக்குவதை வீடியோவாக பதிவு செய்து, அதனை வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் சிறுவர்கள் இருவரும் அடி தாங்க முடியாமல் கெஞ்சுவதும், அவர்களை புகை பிடிக்க வற்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது, சிறுவர்களை தாக்குவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியாகி தீயாய் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவிற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் சம்பந்தப்பட்ட 15 வயதுடைய 4 மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய 4 பள்ளி மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த ஆமத்தூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.