தவெக விஜய் மீது சந்தேகமாக இருக்கிறது! புதிய ரூட் எடுத்து ‘அட்டாக்’ செய்த சீமான்!

தவெக விஜய் மீது சந்தேகமாக இருக்கிறது! புதிய ரூட் எடுத்து ‘அட்டாக்’ செய்த சீமான்!

கரூர் கூட்டநெரிசல் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும் தவெக விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சிறுபான்மை மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் கேள்வி பதில் நிகழ்ச்சி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தண்ணீரோடு பேசப் போகிறேன்; நவம்பர் 15 ஆம் தேதி தண்ணீர் மாநாடு நடத்துகிறேன்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை குறித்து பேசிய அவர், "கல் குவாரிகள் விவகாரத்தில் குற்றத்தை அங்கீகரித்து நடைமுறைப்படுத்திவிட்டனர். தமிழ்நாட்டில் 32 ஆறுகள் மரணித்துவிட்டன,” என்று தெரிவித்தார்.

விஜய் மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும் விஜய் மீது ஏன் காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், மற்றவர்கள் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசினார்.

இது தொடர்பாக பேசிய சீமான், "சிபிஐ விசாரிக்க வேண்டிய நபர்கள் அனைவரும் விஜய் அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டனர். விசாரணை நடைபெறும் சூழலில் அவர்கள் அனைவரையும் விஜய் சந்தித்து பேசினால் விசாரணை முறையாக நடைபெறுமா? ஆனந்த் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்பிணை கோரினார். வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுவிட்டதும் முன்பிணை மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

"வ.உ.சி, பாரதியார் போன்ற அறிவார்ந்த மேதைகள் வாழ்ந்த நிலத்தில் அறிவார்ந்த என் சமூகம் திரை கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அசிங்கமானது, அவமானமானது," என்று சீமான் தெரிவித்தார்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு

மேலும், "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறேன். வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு சொந்த மாநிலத்தில் வாக்குரிமை இருக்க வேண்டும். 1.25 கோடி இந்தி பேசும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தமிழ் சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் வட இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக வாக்கு செலுத்துவதில் ஒரே நிலையில் நின்று விடுவார்கள். அவர்கள் காங்கிரஸுக்கு கூட வாக்களிக்கமாட்டார்கள். மொத்த நபர்களும் பாஜகவிற்கு தான் வாக்களிப்பார்கள். இந்த நிலம் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடும். அவர்களுக்கு வாக்குரிமை வந்தால் மாநிலத்தின் அதிகாரம் பாஜகவிற்கு சென்றுவிடும். இந்தி பேசுபவர்களுக்கு உரிமை கிடைத்துவிடும்,” என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் இதுவரை 150 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு முன்பு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சத்யா என்பவரையும், பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக மருத்துவர் சரணையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.