டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி

டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கோரி தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர்.
இதையொட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலைநிறுத்தத்தை தொடங்கியிருப்பது சட்டவிரோதமாகும். அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் செயல்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய வகையிலேயே, எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்பாராத சூழல் உருவான போதும் கூட, மத்திய ட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ், தென்னிந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.
வரும் பண்டிகை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் இண்டேன், பாரத் காஸ், எச்பி விநியோகஸ்தர்கள் தேவைக்கேற்ப சிலிண்டர்களை இருப்பில் வைத்துள்ளனர். இதனை எண்ணெய் நிறுவனங்கள் கண்காணித்தும் வருகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐஓசி சார்பில் வழக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடைகோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுப் குமார் சமந்த்ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களும் காஸ் விநியோகம் கிடைக்காமல் கடுமையாக பாதிக்க நேரிடும் என்பதால் அந்த போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து அதற்கு தடைவிதிக்க வேண்டும், எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.