நியூசிலாந்து டெஸ்ட் அணியில் அஜாஸ் படேல், டாம் பிளெண்டல் சேர்ப்பு

நியூசிலாந்து டெஸ்ட் அணியில் அஜாஸ் படேல், டாம் பிளெண்டல் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல், டாம் பிளெண்டல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 18ஆம் தேதி மவுண்ட் மவுங்கனூயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.

அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால், தொடரை சமன் செய்யும். இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் மற்றும் டாம் பிளண்டல் ஆகியோர் சோர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளைர் டிக்னர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டெச்சரின் உதவியுடன் களத்தில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில் தான் பிளைர் டிக்னருக்கு மாற்றாக அஜாஸ் படேல் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜாஸ் படேல் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய நிலையில், தற்சமயம் ஓராண்டிற்கு பிறகு அவர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.