பாஜக 40 சீட்கள் கேட்டதா? இபிஎஸ் பதில்

பாஜக 40 சீட்கள் கேட்டதா? இபிஎஸ் பதில்

சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நெறியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களை பாப்போம்...

கேள்வி: பாஜக 40 சீட்கள் கேட்டதாகச் சொல்கிறார்களே?

பதில்: சிலவற்றைச் சொல்ல முடியும், சிலவற்றைச் சொல்ல முடியாது. கூட்டணி அமைத்திருக்கிறோம். எத்தனை இடங்கள் என்னென்ன இடங்கள் என்று பேசி முடிவெடுப்போம்.

கேள்வி: திமுக கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சினைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: ஏற்கனவே குறிப்பிட்டேன். கருத்து யுத்தம் நடக்கிறது. திமுக ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் கூட்டணி நிலைக்குமா?, நிலைக்காதா? என்று தெரியவில்லை. 525 வாக்குறுதிகள் வெளியிட்டனர். நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர். நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார்கள், செய்யவில்லை, கல்விக்கடன் ரத்து என்றனர், செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்றார்கள், குறைக்கவில்லை. எல்லா ரேஷன் அட்டைக்கும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாக சொன்னார்கள், கொடுக்கவில்லை. கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுக்கவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. பெயர் வைப்பதில் வல்லவர்கள். பெயரால் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? போட்டோ ஷூட் போட்டு பெயர் வைப்பார்கள், ஒரு திட்டம் அறிவித்து குழு அமைப்பார்கள். 52 குழு போட்டுள்ளனர். அந்த குழுவின் வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை வெளியிடவில்லை.

கேள்வி: எம்ஜிஆர் பாடலில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது?

பதில்: ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.’, ’ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன்..’, ’கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை என மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்’ என்று பெற்றால் தான் பிள்ளையா படத்தில் எம்ஜிஆர் பாடியிருக்கிறார். எங்கள் தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள், நல்ல கருத்துகளை மக்களுக்காக சொன்னார்கள். நடிக்கும் போதும் மக்களுக்காகவே நடித்தார்கள்.

கேள்வி: என்.டி.ஏ வெற்றி பெறுமா?

பதில்: ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். 210 இடங்களில் என்.டி.ஏ வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.