தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி: இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பு
மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்று 38 தொகுதிகளைக் கைப்பற்றும் என இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 272 எம்பி-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
டெல்லி, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அபார வெற்றி பெற்று இருக்கிறது. மக்களவைத் தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். கடந்த மக்களவைத் தேர்தலின்போது 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறிவந்தது. இப்போது தேர்தல் நடந்தால் அந்தக் கனவு நிச்சயமாக கைகூடும். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணிக்கு 182 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
கடந்த 2025-ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு 58 சதவீதமாக இருந்தது. தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அவரது செல்வாக்கு 57 சதவீதமாக நீடிக்கிறது.
இதில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்கே ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியானது, 39-க்கு 38 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.