ஆசஸ் 3வது டெஸ்ட் போட்டி: தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் அலெக்ஸ் கேரி சதம் விளாசி அசத்தினார். இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106 ரன்களையும், உஸ்மான் கவாஜா 82 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 83 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 51 ரன்களையும், ஹாரி ப்ரூக் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பின், 85 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். அதே சமயம் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். மேற்கொண்டு இந்த போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட், 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 170 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 72 ரன்களையும், உஸ்மான் கவாஜா 40 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 349 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங்க் 4 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் 4 ரன்களுக்கும், ஆலி போப் 17 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஜாக் கிரௌலி - ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் இந்த இன்னிங்ஸில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக்கும் 30 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதே சமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஜாக் கிரௌலி 85 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை சேர்த்தது. இதில் ஜேமி ஸ்மித் - வில் ஜேக்ஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 228 ரன்களும், ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலையிலும் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.