அரசியலுக்கு வந்த கமல் பட ஹீரோயின்.. பாஜகவில் சேர்ந்தார்
தமிழில் முரளி நடித்த புதிய காற்று, சரத்குமாரின் இது தாண்டா சட்டம், தங்கமான தங்கச்சி மற்றும் முதல் சீதனம் போன்ற படங்களில் மீனாட்சி என்கிற பெயரில் நடித்தவர் தான் நடிகை ஆமணி. பெங்களூருவில் பிறந்த தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஆமணி தமிழில் தான் முதல்முறையாக அறிமுகமானார். நாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்த அவர் தாய் மொழியான தெலுங்கு திரையுலகில் 1993-ம் ஆண்டு அறிமுகமானார்.
அந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'ஜம்ப லக்கிடி பம்பா' மிகப்பெரிய வெற்றியை பெற, தெலுங்கில் பிரதான நாயகியாக கோலோச்சத் தொடங்கினார். தெலுங்கில் ஆமணி நடித்த இரண்டாவது படமான 'மிஸ்டர் பெல்லம்' சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றுக்கொடுத்தது.
அடுத்தடுத்த வெற்றி பட வாய்ப்புகளை குவித்தது. அந்த வருடம் மட்டுமே 12 தெலுங்கு படங்களில் நடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழுக்கு மீண்டும் திரும்பிய ஆமணி விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் மற்றும் சத்யராஜின் எங்கிருந்தோ வந்தான் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றவர் கமல்ஹாசன் தெலுங்கில் நடித்த 'சுப சங்கல்பம்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்ட இந்தப் படம் ஆமணிக்கு இரண்டாவது நந்தி விருதை பெற்றுக்கொடுத்தது.
1998 வரை படங்களில் நடித்த ஆமணி அதன்பின் 2004-ல் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வரும் ஆமணி தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அந்த வகையில் பாஜகவில் இணைந்திருக்கும் ஆமணி தெலுங்கானா மாநில மக்களுக்காக சேவையாற்ற போவதாக அறிவித்திருக்கிறார். பாஜக மூத்த தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் பாஜகவில் ஆமணி இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.