'ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க விரும்பினேன்... ஆனால்' - மனம் திறந்த நடிகர் முனீஸ்காந்த்
நடிகர் விஜய்யுடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நினைத்து ’ஜனநாயகன்’ படத்தின் இயக்குநரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டதாக நடிகர் முனீஸ்காந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ’மிடில் கிளாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் ஆகியோர் திருச்சி எல்.ஏ.சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்தனர். அவர்களை ரசிகர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கத்திற்கு படத்தின் கதாநாயகன் முனீஸ்காந்த் ஒரு சவரன் தங்க சங்கிலியை பரிசளித்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் கிஷோர், “பல முக்கிய திரைப்பட விமர்சகர்கள் எங்கள் திரைப்படத்தை விமர்சனம் செய்யாமல் புறக்கணித்துள்ளனர். ஒருவேளை அவர்கள் படத்தை விமர்சனம் செய்தால் அதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க மாட்டார்கள் நினைத்திருக்கலாம். இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு தேவை. இது போன்ற படங்களை ஓ.டி.டி.யில் பார்த்துக் கொள்ளலாம் என இருந்து விடாமல் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள்” என்றார்.
இவரை அடுத்து பேசிய படத்தின் கதாநாயகன் முனீஸ்காந்த், “மிடில் கிளாஸ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நான் ஹீரோ கிடையாது, திரைக்கதை தான் ஹீரோ. நான் ஒருபோதும் ஹீரோவாக நடிக்க விரும்பியது இல்லை, எனக்கு காமெடி நன்றாக வரும், மக்களை சிரிக்க வைப்பது பிடிக்கும். ஆனால் எனக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அடுத்தடுத்த படங்களில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் விஜய்யின் ‘ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். அதனால், அவருடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என நினைத்து திரைப்படத்தின் இயக்குநரை நேரில் சென்று பார்த்தேன். விஜய்யுடன் கூட்டத்தில் நிற்பது மாதிரியாவது ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என கேட்டேன். அதற்காகவே இயக்குநரும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார். ஆனால், அதில் நான் நடிக்கவில்லை. வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால், ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாக சூழ்நிலை ஏற்பட்டது. அந்த வாய்ப்பு கைவிட்டுபோனதில் மிகுந்த கவலைதான்” என்றார்.