அஜித்குமார் கொலை வழக்கு: காவல்துறை வாகன ஓட்டுநர் நீதிமன்ற காவலில் அடைப்பு

காவல் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் வழக்கில் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல்துறை ஓட்டுநர் ராமச்சந்திரனை, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில், கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கொடூரமாக தாக்கப்பட்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
உத்தரவின்பேரில் ஜூலை 14 ஆம் தேதி முதல் டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நகை காணாமல் போனதாக புகாரளித்த நிகிதா, அஜித்குமார் உடன் அழைத்து செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன் மற்றும் நண்பர்கள், அஜித்குமார் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி குற்றப் பத்திரிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின்னர் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற அமர்விலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரிக்கும்படி நிகிதா அளித்த புகார் குறித்து இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கில் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உரிய நேரத்தில் இந்த வழக்கு குறித்த குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல்துறை ஓட்டுநர் ராமச்சந்திரனை சிபிஐ போலீசார் கைது செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.