அமெரிக்காவில் சரக்கு விமானம் பயங்கர விபத்து: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

அமெரிக்காவில் சரக்கு விமானம் பயங்கர விபத்து: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

அமெரிக்காவில் நிகழ்ந்த சரக்கு விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே பகுதியில் உள்ள முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொனோலுலு பகுதிக்கு UPS நிறுவனத்தின் சரக்கு விமானம் இந்திய நேரப்படி நேற்று மாலை 5:15 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்துக்குள்ளானது.விபத்து குறித்து தகவலறிந்த லூயிஸ்வில்லே மெட்ரோ போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விமான விபத்து குறித்து கென்டக்கி மாகாண கவர்னர் ஆண்டி பெஷியர் கூறுகையில், "விமானம் புறப்பட்ட போது அதன் இடது பக்க இறக்கையில் சிறிதளவு புகை வந்துள்ளது வீடியோ மூலம் தெரிகிறது. பின்னர் உயர பறக்கும் போது தீப்பந்தம் போல் வெடித்து சிதறியுள்ளது. UPS நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்குகளை கையாளும் வசதி லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ளது. இந்த மையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு பார்சல்கள் கையாளப்படுகின்றன" என்றார்.

மேலும் இந்த விபத்து குறித்து லூயிஸ்வில்லே மெட்ரோ கவுன்சில் உறுப்பினர் பெட்சே ரூஹே, இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார். இந்த விபத்து காரணமாக லூயிஸ்வில்லே விமான நிலையம் இன்று காலை வரை மூடப்பட்டது. இந்த விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்ப எவ்வளவு நாட்கள் ஆகும் என தெரியவில்லை என லூயிஸ்வில்லே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் UPS நிறுவனம் விபத்திற்கு பொறுப்பேற்று, இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை கையாளும் என தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்தின் காரணமாக கென்டக்கி பெட்ரோலியம் மறுசுழற்சி வணிகமும், அருகிலுள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் என கென்டக்கி மாகாண கவர்னர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார். கென்டக்கி பகுதியில் உலோக மறுசுழற்சி தொழில் நடத்தி வரும் டாம் ப்ரூக்ஸ் ஜூனியர் என்பவர் கூறுகையில், இந்த விபத்து நம்ப முடியாத அளவு இடத்தை உலுக்கியது. இப்பகுதி முழுவதும் போர் மண்டலம் போல் காட்சியளித்தது என கூறியுள்ளார்.