மதுரை எல்ஐசி பெண் அதிகாரி மரணத்தில் திடீர் திருப்பம் - சக அலுவலரே எரித்து கொன்றது அம்பலம்!

மதுரை எல்ஐசி பெண் அதிகாரி மரணத்தில் திடீர் திருப்பம் - சக அலுவலரே எரித்து கொன்றது அம்பலம்!

மதுரை ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், முதுநிலை கிளை மேலாளராக பணியாற்றிய கல்யாணி நம்பி (54) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். அப்போது, அதே அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி நிர்வாக அலுவலர் மதுரை ஆண்டாள்புரம் ராம் என்ற ராமகிருஷணன் (45) என்பவருக்கும் கால் உள்ளிட்ட உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, திட்டமிட்டு தீவைக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் திலகர் திடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையே, கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாரயணன், தனது தாயாரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி திலகர் திடல் போலீஸில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், ‘நெல்லையில் கிளை மேலாளராக பணியாற்றி வந்த எனது தாயார், கடந்த மே மாதம் பதவி உயர்வு பெற்று மதுரையில் உள்ள அலுவலகத்தில் பணி செய்தார். தீ விபத்து நடந்த சமயத்தில் எனக்கு போன் செய்து, ‘போலீஸை கூப்பிடுங்க, கூப்பிடுங்க’ என கதறியுள்ளார். அவர் பணியில் இருந்தபோது ஏற்பட்ட இந்த மரணம் விபத்தால் நிகழ்ந்தது அல்ல. அவர் பணியாற்றும்போது அவரது அறையின் கதவுகளை பூட்டமாட்டார். கதவு திறந்தே இருக்கும். ஆனால், தீ விபத்து நடந்தபோது, அலுவலகத்தின் கதவு இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தது.

எனது தாயாருக்கு ஏற்பட்ட மரணம், திட்டமிட்டு சதி செய்து நிகழ்த்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் கேன்கள் கிடந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பிலும், காவல் ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது.

போலீஸாரின் தொடர் விசாரணையில்,அவரே கிளை மேலாளர் கல்யாணி நம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரிய வந்தது. ராமகிருஷ்ணன் அவரது அலுவலகத்தில் இருந்த நீண்ட நாள் இருப்பு ஃபைல், ஆவணங்களை எரிக்க முயன்றுள்ளார். இதை கல்யாணி நம்பி பார்த்து விட்டதால் ஆத்திரத்தில் அவரையும் பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்து கொன்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். நெஞ்சுவலி ஏற்பட்டதாக அவர் கூறியதால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்துக்குப் பிறகு எல்ஐசி கிளை பெண் மேலாளர் மரணத்தில் திடீர் திருப்பமாக அவருடன் பணிபுரிந்த சக அலுவலரே எரித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.