ஸ்லீப் மோடுக்கு சென்ற தவெக.. விஜய் உட்பட டாப் தலைகள் அமைதி.. என்ன காரணம்?'
யாரோ ஸ்லீப் மோட் ஆன் செய்தது போல தவெக இவ்வளவு அமைதியாக இருக்க என்ன காரணம் என்று மக்களிடம் கேள்வி எழத் தொடங்கியுள்ளது.
கட்சியின் தலைவர் எங்கும் எதற்கும் பேசவில்லை . வேறு போஸ்டுகள் எதையும் விஜய் செய்யவில்லை. கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , கட்சியில் புதிதாக இணைந்த நாஞ்சில் சம்பத் என்று ஒருவர் கூட கட்சி சார்பாக எதுவும் பேசவில்லை. அருண் மட்டுமே ஒரு சில நிகழ்வுகளில் பங்கேற்றார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த விழா கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது. இப்படி கட்சி மொத்தமும் அப்படியே சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளது. சிபிஐ விஜய் விசாரணை நாளை நடக்க உள்ளது அதேபோல் நாளை மறுநாள் ஜனநாயகன் வழக்கு நடக்க உள்ளது. இது இரண்டிற்கும் இடையில் விஜய் மொத்தமாக அமைதியாகி உள்ளார். மீண்டும் கரூர் சிபிஐ விசாரணை கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.
கரூர் தொடர்பான சிபிஐ விசாரணையில் மீண்டும் ஆஜராகும் படி விஜய்க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார்.
மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். அவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது." "ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை என்பதால் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஆஜராக நாளை காலை மீண்டும் விஜய் டெல்லி செல்கிறார். நாளை மீண்டும் இவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
ஜனநாயகன் வழக்கு ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய தணிக்கை குழுவின் முக்கியமான வாதம் ஒன்றுதான் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடாது நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதி நடக்கிறது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எப்படி தயாரிப்பு நிறுவனம்... பொய்யாக ஒரு அவசரநிலையை காட்டி எப்படி படத்தை இவர்கள் ரிலீஸ் செய்ய சொல்லலாம்.
சிபிஎப்சி அமைப்பிற்கு இவர்கள் நேரம் கொடுத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக எப்படி ஒரு படத்திற்கு சர்டிபிகேட் வழங்க முடியும். கட் செய்யப்பட்ட காட்சிகளை பார்க்காமல்.. படத்தை எப்படி ரிலீஸ் செய்ய சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இடையேதான் கிட்டத்தட்ட கடந்த 3 வாரங்களாக தவெக கட்சி அமைதியாக இருக்கிறது. கட்சி செயல்பாடுகள் எதுவும் இன்றி மொத்தமாக தவெக முடங்கும் சூழலில் உள்ளது.