என் பெயரில் போலி அழைப்புகள் - ருக்மணி வசந்த் எச்சரிக்கை
தமிழில், விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். அதைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார்.
பின்னர் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் அவர் நடித்த கனகவதி கதாபாத்திரம் பான் இந்தியா அளவில் அவரை கொண்டு சென்றுள்ளது. அடுத்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், செல்போன் எண் ஒன்றை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர், என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களைத் தொடர்பு கொள்வது எனது கவனத்துக்கு வந்துள்ளது. அது என்னுடைய எண் இல்லை. அதிலிருந்து வரும் அழைப்பும் செய்திகளும் போலியானவை. தயவுசெய்து அதற்கு பதிலளிக்கவோ அவரைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம். இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது. எந்த விஷயத்துக்கும் நேரடியாக என்னை அல்லது எனது குழுவைத் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.