எச்-1B விசாவில் பெரிய மாற்றம் - குலுக்கல் முறை ரத்து
எச்-1B விசா முறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய நடைமுறை ஒன்றை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, தற்போது இருக்கும் லாட்டரி குலுக்கல் முறையை ஒழித்து அதற்கு பதிலாக புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தங்கி பணிபுரியும வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1B விசா, இதுவரை லாட்டரி குலுக்கல் முறையிலேயே வழங்கப்பட்டு வந்தது. அதாவது, விசா பெற தகுதியானவர்களாக கருதப்படுவோரின் விண்ணப்பங்கள், கம்யூட்டரில் குலுக்கல் முறைக்கு உட்படுத்தப்படும்.
இதிலிருந்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு எச்-1B விசா வழங்கப்படும். இதுவரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறையால் திறமைசாலிகளாக இருக்கும் பலருக்கு விசா கிடைக்காமல் போவதும், பணித்திறன் குறைவான ஊழியர்கள் அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்தப்படுவதும் அதிகரித்து வந்ததாக புகார் எழுந்து வந்தது.
அதுமட்டுமின்றி, பணித்திறன் குறைந்த ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளத்தை வழங்கி, எச்-1B விசா முறையின் சாராம்சத்தையே சில தொழில்நிறுவனங்கள் கெடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த லாட்டரி குலுக்கல் முறையை முற்றிலுமாக ஒழித்து, அதற்கு பதிலாக திறமை மற்றும் அதிக ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு எச்-1B விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது, வரும் பிப்ரவரி 27-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1B விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் சமூக வலைதளக் கணக்குகளும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும் என அமெரிக்க அரசு இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் சமூக வலைதளங்களில் இதுவரை போட்ட பதிவு, அமெரிக்காவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக இருந்தால் அவர்களுக்கு விசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எச்-1B விசா என்பது வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் சலுகை தானே ஒழிய, அது உரிமை ஆகாது எனவும் அமெரிக்க அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது.