இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த யூனுஸ் பாடுபடுகிறார் - வங்கதேசம்

இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த யூனுஸ் பாடுபடுகிறார் - வங்கதேசம்

இந்தியாவுடன் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிக்க அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முஹம்மது யூனுஸ் எடுத்து வருவதாக அந் நாட்டின் நிதி ஆலோசகர் சலேஹூதீன் அஹமது தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மக்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். போராட்டத்திற்கு தலைமை வகித்தவர்களில் முக்கியமானவரான ஷரீப் உஸ்மான் ஹாடி, கடந்த வாரம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது வங்கதேசத்தில் மீண்டும் பெரும் கலவரத்துக்கு வித்திட்டது. தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சூழலில், ஷரீப் உஸ்மான் ஹாடிக்கு அடுத்த நிலை தலைவராக கருதப்பட்ட முகமது மொடாலெப் சிக்தர் என்பவரும் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் வங்கதேசத்தில் மீண்டும் கலவரமும், வன்முறையும் தலைதூக்கி உள்ளது.

இதனிடையே ஹாடியின் மரணத்துக்கு இந்தியா தான் காரணம் என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவிற்கு தப்பி சென்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், வங்கதேச கலவரத்தில், இந்தியாவை சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து இந்தியாவில் விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமற்ற சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் நிதி ஆலோசகர் சலேஹுதீன் அஹமது செய்தியாளர்களிடம் பேசுகையில், "இடைக்கால தலைவர் முஹம்மது யூனுஸ், இந்தியாவுடனான பதற்றமான சூழ்நிலையை தணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறார்" என தெரிவித்தார்.

முஹம்மது யூனுஸ் நேரடியாக இந்தியாவுடன் பேசினாரா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, சலேஹூதீன் அஹமது பதில் அளிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுடன் பேசியுள்ளார் என்றும் கூறினார்.

"வங்கதேசத்தின் வர்த்தகக் கொள்கை அரசியல் காரணங்களை மையமாக வைத்து செயல்படுத்தப்படவில்லை. வியட்நாம் அல்லது வேறு இடங்களிலிருந்து அரிசி வாங்குவதை விட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது மலிவாக இருக்கும். அத்யாவசியப் பொருட்களை இந்தியாவிலிருந்து வாங்குவது பொருளாதாரரீதியாக வங்கதேசத்திற்கு பலன் தரும்" என்று அவர் கூறினார்.

பொருளாதார நிபுணரான சலேஹூதீன் அஹமது, இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து 50,000 டன் அரிசியை வாங்குவதற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்ததாக அஹமது கூறினார். இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வது வங்கதேசத்திற்குப் பயனளிக்கும் என்றும், ஏனெனில் வியட்நாமிலிருந்து அரிசியை வாங்குவது ஒரு கிலோவுக்கு 10 டாக்கா (0.082 அமெரிக்க டாலர்) அதிகமாக செலவாகும் என்றும் அவர் கூறினார்.

வங்கதேசம் 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து டாக்கா-புதுடெல்லி உறவு இப்போது மிக மோசமான நிலையில் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்த நிலையில், சலேஹூதீன் அஹமதுவின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளிலும் உள்ள தூதர்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்படுவதும், இரு தலைநகரங்களிலும் மற்றும் இரு நாடுகளின் பிற இடங்களிலும் உள்ள வங்கதேச மற்றும் இந்திய தூதரகங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெறுவதும் பதற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஆனால், "நிலைமை அவ்வளவு மோசமான கட்டத்தை எட்டவில்லை" என்று வங்கதேசம் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வெளியே இருந்து பார்க்கும் போது, ​​பல விஷயங்கள் நடப்பது போல் தோன்றலாம்... ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை" என்று அஹமது கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகளை யார் வெளியிடுகிறார்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது பதில் அளித்த சலேஹூதீன் அகமது, ​​"இரு நாடுகளுக்கும் இடையே எந்தவித கசப்புணர்வும் ஏற்பட நாங்கள் விரும்பவில்லை. வெளியிலிருந்து யாராவது பிரச்சனைகளைத் தூண்ட முயற்சித்தால், அது யாருக்கும் பயன் தராது" என்று அவர் கூறினார்.