உத்தரப்பிரதேச பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள்
உத்தரப் பிரேதசப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளை அறிமுகப்படுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்கும் இடையிலான பிணைப்பை கொண்டாடும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. உ.பி மாநிலத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு ராமேஸ்வரத்தில் நிறைவடைந்தது. இதன் கருப்பொருளாக 'தமிழ் கற்கலாம்' என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சங்கமம் 4.0 கருப்பொருளான 'தமிழ் கற்கலாம்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநில அரசு தற்போது அதற்காக புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வகுப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உ.பி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமான 'காசி தமிழ் சங்கமம்' திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இது தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு இடையேயான கலாச்சாரம், மொழி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் உ.பி அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வாரணாசியில் உள்ள ராணி அரசு கல்லூரியில் பயிலும் மாணவி பாயல் படேல் என்பவர், தமிழை விரைவாக கற்றுக் கொண்டதற்காக பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில், அந்த கல்லூரியில் தினசரி மாலை நேர தமிழ் வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக மாவட்ட நிர்வாகம் தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழை கற்பதற்கான முன்னெடுப்பை உ.பி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி இரு மாநிலங்களின் கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மொழிப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாரணாசியை சேர்ந்த 50 இந்தி ஆசிரியர்கள் இந்தி கற்றுத் தர தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் உ.பி மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியர்கள் தமிழக மக்களுக்கு இந்தி மொழியை கற்றுக் கொடுக்க உள்ளனர். தேசிய ஒற்றுமையை வளர்க்கவும் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள வரலாற்று தொடர்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவும் என்று உத்தரப்பிரதேச மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.