100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்ற மசோதா; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்ற மசோதா; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும், நாடு முழுக்க கிராமப்புற ஏழை, எளிய மக்கள் உட்பட பலருக்கும் 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு இத்திட்டத்தின் அம்சங்களை மாற்றி புதிய பெயருடன் மசோதாவை நாளை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை நீக்கிவிட்டு, '' கிராம வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வளர் இந்திய உறுதி திட்டம்'' (The Viksit Bharat Guarantee For Rozgar And Ajeevika Mission (Grameen)' or 'VB G RAM G) என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது. அதே சமயம், திட்டத்திற்கு இதுவரை முழு நிதியையும் மத்திய அரசே ஒதுக்கி வந்த நிலையில் இனி 60% மத்திய அரசும், 40% மாநில அரசுகளும் ஒதுக்கிடும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய மசோதா குறித்து பேசிய ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், ''இந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு உத்தரவாதமான கூலி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இருப்பினும், கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள பெரும் சமூக, பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்த மசோதா, வேலைவாய்ப்பைத் தாண்டி விரிவான கிராமப்புற வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில், அறுவடை காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதையும் இந்த மசோதா உறுதி செய்யும். ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில விதைப்பு மற்றும் அறுவடை காலங்களை அறிவிக்கலாம். அப்போது இந்த திட்டம் இடைநிறுத்தப்படும்.

மேலும், இந்த திட்டதின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவாகும். அவர்களது பணி ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். இதனால், மோசடி அபாயம் தடுக்கப்பட்டு, நிர்வாகம் நவீனமயமாக்கப்படும்.'' என்றார்.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் முரளிதரன் கூறுகையில், ''இந்த மசோதா, திட்டத்தின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசை சட்டப்பூர்வமாக விடுவிக்கிறது. வேலைவாய்ப்பை 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்துவதாக கூறுவது வெறும் ஒப்பனை மட்டுமே. மேலும், தொழிலாளர்களின் அட்டைகளை முறைப்படுத்துவதால் கிராமப்புற குடும்பங்களின் பெரும் பகுதியினரை விலக்குவதற்கு வழிவகுக்கும். அறுவடை காலங்களில் 60 நாட்கள் வரை வேலைவாய்ப்பை நிறுத்தி வைக்கப்படும் என மசோதா சொல்கிறது. அப்படியானால், அந்த நாட்களில் வேலையில்லாமல் இருப்பவர்கள், நில உரிமையாளர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், பணியிடத்தில் டிஜிட்டல் வருகைப்பதிவு கட்டாயமாக்குவது, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற பெரும் சிரமங்களை ஏற்படுத்தும்'' என தெரிவித்தார்.