கிரிக்கெட்டில் சண்டை, ஹாக்கியில் சமாதானம்! பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கிய இந்திய வீரர்கள்!

கிரிக்கெட்டில் சண்டை, ஹாக்கியில் சமாதானம்! பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கிய இந்திய வீரர்கள்!

 இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள், கிரிக்கெட் போட்டியில் கை குலுக்காத நிலையில், இந்தியா 21 வயதிற்கு உட்பட்டோருக்கான ஹாக்கி அணி, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் கை குலுக்கியது கவனத்தை பெற்றுள்ளது.

மலேசியா நாட்டில் ’சுல்தான் ஆஃப் ஜோகோர்’ (Sultan of Johor) கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டமன் தயா ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. பெகல்ஹாம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக ஹாக்கி போட்டியில் மோதின. இப்போட்டியில் தொடக்கத்தில் போட்டிக்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு, விளையாட்டு போட்டியில் சம்பிரதாயமாக இரு நாட்டு வீரர்களும் கை குலுக்கு கொண்டனர்.

மேலும் இரு நாட்டு அணிகளின் கேப்டன்களும் டாஸ் போடப்பட்ட பின்பும் கை குலுக்கிக் கொண்டனர். இந்திய ஹாக்கி வீரர்களின் இந்த செயல் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைக்கு எதிரானதாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கை குலுக்கவில்லை. அதே போல் தற்போது நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் கை குலுக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், ஹாக்கி போட்டியில் இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொண்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் இரு அணிகளும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தின. மூன்று முறை சாம்பியனான இந்திய அணி ஆரம்ப கட்டத்தில் 0-2 என பின் தங்கி இருந்த நிலையில், இரண்டாம் பாதியில் 3 கோல்கள் அடித்து அசத்தினர்.

ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் கோல் அடிக்க, இறுதியில் 3-3 என்ற கணக்கில் டிராவானது. இதன் மூலம் இந்திய அணி கோல் வித்தியாசம் பொருட்டு புள்ளிப் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. 21 வயதுக்கு உட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பையை இந்திய அணி மூன்று முறை (2013, 2014, 2022) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.