அமமுகவுக்கு 7 தொகுதிகள்.. பாஜக தலைமையிடம் எடப்பாடி சொன்ன பாயிண்ட்.. தயங்கும் டிடிவி தினகரன்!
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக தரப்புக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி பாஜக தலைமைக்கு தகவல் அனுப்பி இருப்பதாக கூறுகின்றனர்.
டிடிவி தினகரன் தரப்பில் கேட்கப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதியை வழங்கவும் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சில மணி நேரம் ஆலோசித்தார். அப்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் கொண்டு வர அமித்ஷா அறிவுறுத்தினார். அமமுகவுக்கு நேரடியாக எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு செய்ய வேண்டாம் என்றும், பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி உள் ஒதுக்கீடாக அமமுகவுக்கு வழங்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
2021 சட்டசபைத் தேர்தலில் அமமுக சுமார் 20 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவுக்கு இறங்கி வந்ததாகவும் சிலர் விமர்சிக்கின்றனர். அதேபோல் ஓபிஎஸ் விஜய் பக்கம் செல்லும் சூழலில், டிடிவி தினகரனும் அந்தப் பக்கம் சென்றால், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படும். இதனை கருதியே எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டார்.
அதன்பின் உடனடியாக டெல்லி புறப்பட்ட டிடிவி தினகரன், அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க தயங்கி இருக்கிறார்.
அதேபோல் என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்றும், ஆண்டிப்பட்டி தொகுதி கட்டாயம் வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அமமுக தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கியத் தகவல் ஒன்றை டெல்லி பாஜக தலைமைக்கு கொடுத்துள்ளார்.
அதன்படி அமமுகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கலாம் என்றும், ஆண்டிப்பட்டி, சாத்தூர், பாபநாசம், தாம்பரம் உள்ளிட்ட தொகுதிகளும் அடக்கம் என்றும் கூறி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல் டெல்டாவிலும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவை டிடிவி தினகரன் ஏற்பாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை பாஜக பார்த்துக் கொள்ளும் என்றாலும், அமமுகவுக்கு இது குறைவான எண்ணிக்கை என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை டிடிவி தினகரன் இதனை ஏற்றுக்கொண்டால், அது அதிமுகவுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் காட்ட மாட்டோம் என்றும் தினகரன் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.