புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை: ஆனந்த்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக வெற்றிக் கழகம் நாளை (டிச.9) நடத்தும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டம் புதுச்சேரி - உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கட்சியினரும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் காணுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத்தினர் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், மதில் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் , கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும். இவ்வாறு ஆனந்த் அந்த அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.