'''திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?'' - ராமதாஸ் பரபரப்பு விளக்கம்
திமுக தற்போது வரை தன்னிடம் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், மேலும் கூட்டணி தொடர்பாக இன்னும் சில தினங்களில் முடிவெடுக்கப்படும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராமதாஸ் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி சமூக ஊடக பேரவை மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பாமக சமூக ஊடகப் பேரவை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சமூக வலை தளங்களில் நமது கட்சியை விமர்சனம் செய்வது தொடர்பாகவும், அதற்கு நமது கட்சியை சார்ந்தவர்கள் எவ்வாறு பதில் அளிப்பது என்றும், இதே போன்று வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான யூகங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''திமுக தற்போது வரை என்னிடம் கூட்டணி குறித்து பேசவில்லை. மேலும் கூட்டணி தொடர்பாக இன்னும் சில தினங்களில் முடிவெடுக்கப்படும். எனக்கு சென்னையில் பல வேலைகள் உள்ளது. அதனால் நான் இன்று மாலை சென்னை செல்கிறேன். அமைதியான முறையில் தேர்தல் நடக்க வேண்டும். இந்த புதிய ஆண்டு நல்லதாக நடக்க வேண்டும். பாஜக தரப்பில் இருந்தும் என்னிடம் கூட்டணி குறித்து எதுவும் இதுவரை பேசவில்லை.'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாலை 3 மணியளவில் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவர் ராமதாஸ் சென்னை விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.