கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துங்கள் - முதல்வருக்கு பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
2026ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றம் மட்டுமில்லை; யாரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்ஸ பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டு பணிகள் 50% நிறைவடைந்துள்ளன. 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் பேசவில்லை, நாங்களும் யாரிடமும் பேசவில்லை.
காஞ்சா போதையில் தமிழக இளைஞர்கள் சிக்கியுள்ளனர். போதையில் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட வடமாநில தொழிலாளி ஒருவரை கஞ்சா போதையில் சிறுவர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் என அனைத்து தரப்பிலும் சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்த புத்தாண்டு தினத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
5 வருடங்கள் ஆட்சி நிறையவடையவுள்ள உள்ள நிலையில் இன்றும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற கோபம் அவர்களுக்கு உள்ளது. ஆட்சி மாற்றத்தை பொறுத்தவரை கேப்டன் (விஜயகாந்த்) சொன்னது போல மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அதுபோல மக்களுக்கு நல்ல ஆட்சி அமைந்தால் நல்லதுதான். 2026 தேர்தலில் இதுவரை வராத மாற்றம் ஒன்றும் வரும். அனைத்து கட்சியும் தங்கள் கூட்டணி தேர்தலில் வெல்லும் என சொல்வார்கள். அதையேதான் நாங்களும் சொல்கிறோம். தேமுதிக கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.