நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்

நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்

டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி, நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டை அமமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக பதவி வகித்து வரும் சாட்டை துரைமுருகன், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் ‘சாட்டை’ என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில், கட்சி சார்ந்த கருத்துகளை பேசும் அவர், எதிர்க்கட்சிகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, சமீபத்தில் அவர் சில சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது, சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்து சில விமர்சனம் மற்றும் கருத்துக்களை கூறியுள்ளார். அது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, “டிடிவி தினகரன் பியூன் வேலைக்கு கூட லாய்க்கு இல்லை” என்று சாட்டை துரைமுருகன் விமர்சித்ததாக கூறப்படுகிறது. அதற்கு அமமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை தனது சாட்டை வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனை கண்டித்தும், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி சண்முகாநகரில் உள்ள அவரது வீட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அப்போது, சாட்டை துரைமுருகனே மன்னிப்பு கேள்.. சாட்டை துரைமுருகன் ஒழிக.. உள்ளிட்ட கோஷத்தை எழுப்பினர். மேலும், சிலர் துடப்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாட்டை துரைமுருகனை வீட்டில் இருந்து பத்திரமாக வெளியேற்றி, காரில் ஏற்றி அனுப்பிதனர். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமமுகவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனால், அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பிற்காக சண்முகாநகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.