டெல்லி சென்றது ஏன்? டி.டி.வி.தினகரன் பதில்

டெல்லி  சென்றது ஏன்? டி.டி.வி.தினகரன் பதில்

கூட்டணி தொடர்பாக தனக்கு யாரும் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பு அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

டெல்லியில் சென்றது ஏன்?

என்.டி.ஏ கூட்டணியில் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் உங்கள் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்ட போது, "ஆர்வத்தில் யாரோ ஒருவர் பேனர் வைத்துள்ளார். எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. டிடிவி தினகரன் அவரை சந்தித்தார், இவரை சந்தித்தார் என தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள். பொங்கல் நேரம் என்பதால் கட்சி நிகழ்ச்சிகள் இல்லை. சொந்த வேலையாக பல ஊர்களுக்கு செல்கிறேன். டெல்லிக்கு சென்றால் அரசியல் வேலைகளுக்காக தான் செல்கிறேன் என இல்லை. அங்கு யாரையும் சந்திக்கவில்லை. எனது சொந்த வேலைக்காக மட்டுமே அங்கு சென்று வந்தேன்" என்றார்.

அமமுகவுக்கு அரசியல் அழுத்தமா?

சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், "தேர்தல் கூட்டணி தொடர்பாக எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் சேரும் என்பதை உரியவர்கள் அறிவிப்பார்கள். நான் ஏற்கனவே தெரிவித்தபடி 2026 தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என நம்புகிறேன். யாருடன் அமமுக கூட்டணி அமைக்கிறதோ அக்கட்சி கண்டிப்பாக வெற்றிபெறும்" என்றார்.

எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்ற தேர்தலில் போட்டி தொடர்பான பதிலளித்த அவர், "வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கே போட்டியிடுவேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை. கூட்டணிக்கு நான் தலைமை ஏற்றால் கூட்டணி ஆட்சி தொடர்பாக அறிவிப்பேன். ஆனால், நாங்கள் கூட்டணியில் சேர போகிறோம். எனவே இது தொடர்பாக கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி தான் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையும்" என்றார்.

அதிமுக தேர்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா?

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான கேள்விக்கு, "இப்போது வாக்குறுதிகள் கொடுத்துள்ளார்கள். அமமுக பற்றி மட்டும் தான் நான் இப்போது பேசமுடியும். ஓபிஎஸ், சசிகலா ஆகியோரின் நிலைப்பாடு குறித்து அவர்கள் தான் பேச வேண்டும்" என்றார்.