கஞ்சா போதையில் கொடூரம்: 2 நண்பர்கள் அடித்துக்கொலை

கஞ்சா போதையில் கொடூரம்: 2 நண்பர்கள் அடித்துக்கொலை

திருவள்ளூரில் கஞ்சா போதையில் நண்பர்கள் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி 27-வது வார்டை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவர் செவ்வாப்பேட்டையில் உள்ள பல்லவன் வங்கியில் பணியாற்றி வந்தார். இவரின் நண்பர்களான சுகுமார் (31), கேசவமூர்த்தி (23) உள்ளிட்ட இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், நண்பர்கள் 3 பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம், புட்லூர் அருகே உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 7 மணி அளவில் திரும்பியுள்ளனர். இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மணவாள நகரில் ராகவேந்திரா பேக்கரி அருகே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அன்பு, வினோத் என்ற இளைஞர்கள் பேக்கரி முன்பு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர்.

இதனைப் பார்த்த பார்த்திபன் உள்ளிட்ட நண்பர்கள் ஏன் இடிப்பது போல் வேகமாக வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஜோதிஷையும், வினோத்தையும் அவர்கள் 3 பேரும் அடித்துள்ளனர்.

தாங்கள் தாக்கப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி நீலகண்டனிடம் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நீலக்கண்டன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரையும் கஞ்சா போதையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வங்கி ஊழியர் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் சுகுமார் மற்றும் கேசவ மூரத்தி ஆகிய 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுகுமார் உயிரிழந்தார். மேலும், கேசமூர்த்தி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி, மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய நீலகண்டன், ஜோதிஷ், வினோத், ஜவகர் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.