எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய விஷயங்களை ஈபிஎஸ் பின்பற்றவில்லை - செங்கோட்டையன் ஓபன் டாக்
தூய்மையான ஆட்சிக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை விஷயங்களை இப்போது எடப்பாடி பழனிசாமி பின்பற்றவில்லை என செங்கோட்டையன் தெரிவித்தார்.
தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
டெல்லியிலிருந்து வந்த அறிவுரையின்பேரில்தான் தவெகவில் இணைந்ததாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும் கருத்துக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் நான் தெளிவாக முடிவு எடுத்துள்ளேன். மற்றவர்கள் கருத்தைக் கேட்டு நான் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.
தவெக தலைமையில் தூய்மையான ஆட்சி அமைய பாடுபடுவேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பியபோது, “தூய்மையான ஆட்சி என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டபோது நாங்கள் அதை பின்பற்றினோம். அதனால்தான் புரட்சித்தலைவர் இருக்கும் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. ஜெயலலிதாவை பொறுத்தவரையில் 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் என்ன கொடுத்தார்கள் என்பது அவருக்கே தெரியும்” என்று பதிலளித்தார்.
கட்சிக்கு விரோதமாக பல வருடங்களாக செயல்பட்டதாகவும், கட்சி தலைமைக்கு கெடு விதித்ததாகவும் ஈபிஎஸ் பேசியது பற்றி கேட்டபோது, “அப்படி அவருக்கு தோன்றி இருக்கிறது. எனக்கு அப்படி தோன்றவில்லை. பத்திரிக்கையாளர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த வீடியோவை மீண்டும் ஒருமுறை பார்த்தால் புரியும். 5 நாளைக்குள் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், அதன்பிறகு யாரை சேர்ப்பது என்பது பற்றி அவரே முடிவெடுக்கலாம் என்றுதான் கூறியிருந்தேன்.
அந்த 2 வருடங்களில் நான் ஓபிஎஸ்ஸிடமோ, டிடிவி தினகரனிடமோ ஒருமுறைகூட பேசவில்லை. பொய்யாக ஒரு காரணத்தை சொல்லி என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்று ஈபிஎஸ் ஆசைப்பட்டார். அதை செய்துவிட்டார். நேற்று நடந்த கூட்டத்தைப் பற்றிக்கூட அனைவருக்கும் தெரியும். எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த கூட்டத்திற்கு பேருந்தில் அழைத்து வரப்பட்டார்கள் என்பது கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.
தவெகவினரின் வரவேற்பு குறித்து கேட்டபோது, “நான் கோவை சென்றபோது விமான பழுது காரணமாக பெங்களூரு சென்று, அங்கிருந்து 2 மணி நேரம் தாமதமாகத்தான் சென்றேன். ஆனாலும் கழக தொண்டர்கள் எனக்காக காத்திருந்து வரவேற்பு அளித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். அவர்களிடம் பேசியபோது, ஒரு மாற்றத்தை எதிர்பார்ப்பதாக கூறினார்கள்” என்றார்.