சர்வதேச விழாவில் ரஜினிகாந்தின் “லால் சலாம்” படம்
கோவாவில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியத்தில், ரஜினிகாந்த் நடித்த “லால் சலாம்” திரைப்படம் திரையிடப்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா அரசின் சார்பில் சர்வதேச திரைப்பட விழா (IFFI - International Film Festival of India), பனாஜியில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், விழாவின் இறுதி நாளான நேற்று (நவ.28) லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” (Lal Salaam) திரைப்படம் சிறப்புத் திரையிடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், லிவிங்ஸ்டன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் “லால் சலாம்” திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல்ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலில் திரையிடப்பட்டது. அப்போது இயக்குநர் ஐஸ்வர்யா திரைப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.