நீண்ட நாளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் மம்மூட்டி.. தனுஷுடன் சூப்பர் காம்போ..
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் மம்மூட்டி தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். என்ன படம் தெரியுமா?
கடந்த 1990-ம் ஆண்டு வெளியான ‘மௌனம் சம்மதம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் மம்மூட்டி. அடுத்து ‘அழகன்’ படத்தில் நடித்தவர், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தளபதி’ படத்தில் ரஜினி உடன் இணைந்து நடித்திருந்தார்.
தொடர்ந்து ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘ஆனந்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். மம்மூட்டி தமிழில் கடைசியாக நடித்த படம் ‘பேரன்பு’. 2019-ல் வெளியான இந்தப் படத்தை ராம் இயக்கியிருந்தார். அதன் பிறகு தமிழில் மம்மூட்டி நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ‘கர’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இது தனுஷின் 55-வது படமாக உருவாகிறது. படத்தை தனுஷும் - ராஜ்குமார் பெரியசாமியும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் தான் மம்மூட்டி தனுஷூடன் இணைந்து நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மம்மூட்டி தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்க இருப்பது ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.