கனவாய் போன கணிப்பு... தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவு!

கனவாய் போன கணிப்பு... தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்வது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் அக்டோபர் 16-ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை துவங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 50 செ.மீ. அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து வங்காள விரிகுடா, அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின. மேலும் நடப்பாண்டில் 'டிட்வா' புயல் வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கை வழியாக தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை ஓரமாக சென்றது. ஆனால் திடீரென மறுபடியும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு மழையை அளித்தது. அதே போல, டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழ்நாட்டிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பரவலாக மழைப் பொழிவு இருந்தது.

வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரையில் இருப்பதால், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி அதிகளவில் மழைத் தருமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் டிட்வா-வுக்கு பிறகு புதிதாக புயல் எதுவும் உருவாகவில்லை.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக 442.8 மில்லி மீட்டர் (44. 2 சென்டிமீட்டர் ) மழை பதிவாகும். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, சென்னையில் வடகிழக்கு பருவமழை 10 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. இயல்பாக அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னையில் 809.6 மில்லி மீட்டர் மழை பதிவாகும், ஆனால் இந்த ஆண்டு 724.8 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 95 சதவீதம் மழை கூடுதலாக பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இயல்பாக 514 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகும், ஆனால் இந்த ஆண்டு 1,005 மில்லி மீட்டர் அதாவது 100 சென்டி மீட்டர் அளவில் மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 95 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு வட மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மழை பொழிவு இயல்பை விட குறைவாக தான் பதிவாகி உள்ளது.