இடி மின்னல் தாக்கி கடலூர், திருவண்ணாமலையில் 5 பெண்கள் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் இடி, மின்னல் தாக்கியதில் கடலூரில் 4 பெண்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது. மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கு பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, மாலை 3 மணிக்கு மேல் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது. வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் எனும் கிராமத்தில் மக்காச்சோள தோட்டத்தில் களை வெட்டும் பணியில் அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென இடி, மின்னல் உருவாகி, தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த கவிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு மற்றும் அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், அதே வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இடி தாக்கியதில் இரு கண்களிலும் பார்வை பறி போனது.
இதே போன்று, திருவண்ணாமலை அருகே இன்று இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த வகையில், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் இடி தாக்கி ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த உமா (30), பெரியம்மாள் (45) ஆகிய இருவரும் கருங்குழி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பயிர் நடவு நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் இடித்தது. அப்போது பயிர் நடவு பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல, அரியலூரில் 2017 ஆம் ஆண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது இடி தாக்கியதில், 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.