விளையாட்டு களத்தில் எஞ்சியுள்ள நாட்களை அனுபவிக்க விரும்புகிறேன்’ - ரொனால்டோ

ப்ளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் கால்பந்தாட்ட வீரர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது 1.4 பில்லியன் டாலர்கள் என தகவல்.
40 வயதான ரொனால்டோவின் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அல்-நஸர் கிளப் அணி உடனான அவரது ஒப்பந்தம். கடந்த ஜூன் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர் என தகவல். 2023 வரை சம்பளம் மூலம் சுமார் 550 மில்லியன் டாலர்களை அவர் ஈட்டியுள்ளார். நைக் நிறுவனத்தின் 10 ஆண்டுகால ஒப்பந்தம் மூலம் 18 மில்லியன் டாலர்கள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து 175 மில்லியன் டாலர்களையும் அவர் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பர்க் தெரிவித்துள்ளது.
“கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் எனக்குள் இன்னும் அப்படியே உள்ளது. நான் ஓய்வு பெற வேண்டும் என எனது குடும்பத்தினர் சொல்கின்றனர். 900 கோல்களை பதிவு செய்துள்ள நிலையில் ஏன் ஆயிரம் கோல்கள் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், நான் அதை நினைக்கவே இல்லை.
களத்தில் நான் இன்னும் சிறப்பாகவே உணர்கிறேன். எனது தேசிய மற்றும் கிளப் அணிகளுக்கு உதவி வருகிறேன். அப்படி இருக்கும்போது நான் ஏன் அதை தொடரக் கூடாது? நான் விடைபெற முடிவு செய்து விட்டால் அனைத்து விதமான போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விடுவேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் நான் விளையாடுவேன் என எனக்கு தெரியவில்லை. அதனால் களத்தில் எனக்கு எஞ்சியுள்ள நாட்களை அனுபவிக்க விரும்புகிறேன்” என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.