ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம்: நிதி ஆயோக்

ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடம்: நிதி ஆயோக்

ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது; உத்தரப் பிரதேசம் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடல்சார் அல்லாத மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய கடலோர மாநிலங்கள் பிடித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தையும், அதைத் தொடர்ந்து முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களில், உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், உத்தரப் பிரதேசம் ஏற்றுமதியில் ஒட்டுமொத்தமாக 7-வது இடத்திலும், நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களில் 2-வது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில், வெறும் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள, இந்த மிகப் பெரிய முன்னேற்றம், உத்தரப் பிரதேச மாநில அரசு ஏற்றுமதித் துறையில் மேற்கொண்ட விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கைகளின் நேரடி விளைவாகும் என்று நிதி ஆயோக்கின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ், மாநிலத்தில் ஏற்றுமதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், செலவுப் போட்டித் தன்மையை அதிகரித்தல், பல்வேறு தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் வணிகச் சூழலை எளிதாக்குதல் ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.