மோந்தா புயல் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும்; காக்கிநாடா துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மோந்தா புயல் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும்; காக்கிநாடா துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மோந்தா புயல் எதிரொலியாக சென்னை- விசாகப்பட்டினம் இடையே இன்று (அக் 28) 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. மோந்தா புயல் இன்று இரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மோந்தா புயலாக வலுவடைந்தது. தற்போது, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கில் 420 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 570 கி.மீ., தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில் 600 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, இன்று காலை தீவிர புயலாக வலுவ டைந்து, மாலை அல்லது இரவில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 90 -100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும்.

எச்சரிக்கை கூண்டு


ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ள நிலையில் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணாபட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழகம், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.ஆந்திராவில் புயலால் பாதிக்கப்படும் என வானிலை மையம் கணித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.