அடித்து ஊற்றப் போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?

அடித்து ஊற்றப் போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் தமிழ்நாட்டில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று (அப்.5) நிலவிய ‘சக்தி புயல்’ தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.6) காலை 5.30 மணியளவில் வலுக்குறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது. மேலும் தெற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் அதேபகுதிகளில் நிலவுகிறது. தற்போது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 940 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தொடர்ந்து, கிழக்கு-தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து, நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.8ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.9ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்புள்ளது.

இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.தமிழக கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் எந்தவித எச்சரிக்கையும் இல்லை.

 மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60-80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும்; ஏனைய மத்தியமேற்கு-வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும்; ஏனைய மத்தியமேற்கு-வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும், என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.