கூட்டணியை பலப்படுத்திய பெரிய கட்சிகள்! - வாய்ப்புகளை தவறவிட்டு நிற்கும் தவெக

கூட்டணியை பலப்படுத்திய பெரிய கட்சிகள்! - வாய்ப்புகளை தவறவிட்டு நிற்கும் தவெக

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மளமளவென கட்சிகளைச் சேர்த்து அதே சூட்டுடன் பிரதமர் தலைமையில் மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் பியூஷ் கோயல். இதனால், தங்களின் கூட்டணியை பலப்படுத்திவிட்ட திருப்தியில் இருக்கிறது அதிமுக.

“எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டிருந்த தினகரனையே, “பழனிசாமியும் நானும் அண்ணன் - தம்பிகள்” என்று பேசவைத்த பராக்கிரமம் பாஜக-வையே சாரும். அப்படி இருக்கையில், பிரேமலதா, ஓபிஎஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் அந்தக் கட்சிக்கு பெரிதாக சிரமம் ஒன்றும் இருக்காது என்றே தெரிகிறது.

வட மாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் பாமக-வும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அமமுக-வும் அதிமுக கூட்டணிக்குள் வந்திருப்பதே அந்தக் கூட்டணிக்கு பலம் தான். பூவை ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோரையும் தங்கள் பக்கமே தக்க வைத்திருப்பதன் மூலம், பட்டியலின வாக்கு வங்கியையும் ஓரளவுக்கு பக்கா பண்ணி இருக்கிறது பாஜக - அதிமுக கூட்டணி.

இதேபோல் திமுக-வும் தங்கள் கூட்டணி பலமாக இருப்பதாக நினைத்து மெத்தனம் காட்டாமல், எஸ்டிபிஐ, தமிழர் தேசியக் கட்சி, வீர முத்தரையர் சங்கம் உள்ளிட்ட புது வரவுகளையும் உள்ளே இழுத்துப் போட்டு கூட்டணியைப் பலப்படுத்தி வருகிறது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே முத்தரையர் சமூகத்து மக்கள்அதிமுக சைடில் நிற்பவர்கள். அப்படி இருக்கையில், வீர முத்தரையர் சங்கத்தை திமுக தங்கள் அணிக்கு கொண்டு வந்திருப்பது ராஜதந்திர நடவடிக்கை தான். பாமக (ராமதாஸ்), தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளையும் திமுக இன்னும் கைவிட்டுவிடவில்லை.

இவ்விரண்டு கூட்டணிகளும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு தங்களைப் பலப்படுத்தி வரும் நிலையில், இவர்களுக்கு சரியான போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தவெக, போதிய அனுபவம் இல்லாத காரணத்தாலும் வழிகாட்ட வகை தெரிந்தவர்கள் இல்லாத காரணத்தாலும் தங்களுக்குக் கிடைத்த கூட்டணி வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு தனித்து நிற்கிறது.

அமமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணிக்காக தவமிருந்த நிலையில், அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் எந்த முயற்சியிலும் அந்தக் கட்சி இறங்கியதாகத் தெரியவில்லை. அப்படி எதிலும் இறங்கமுடியாத அளவுக்கு, ‘ஜனநாயகன்’ பட விவகாரத்துக் குள்ளும் கரூர் கூட்ட நெரிசல்வழக்கு விசாரணைக்குள்ளும் விஜய்யை தந்திரமாக முடக்கி விட்டது பாஜக. ஆக மொத்தத்தில், அனுபவசாலிகள் தேர்தல் ஆட்டத்துக்கு ஆயத்தமாகி விட்டார்கள். புதிதாய் களத்துக்கு வந்தவர், ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்பது போல் நிற்கிறார்.