'நாங்கள் இந்தியாவில் விளையாடமாட்டோம்' - வங்கதேச அணி போர்க்கொடி தூக்க காரணம் என்ன?
கேகேஆர் அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியாவுக்கு செல்ல முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றும்படியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) வகுப்புவாத கொள்கைகள் நிலவுவதாகவும், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும் வங்கதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ரூல் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு துறை ஆலோசகர் என்ற முறையில் தற்போதைய விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு விரிவாக எடுத்துரைக்கும்படி வங்கதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறிவுறுத்தி இருந்தேன் எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர், ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் இந்தியாவில் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், எங்கள் அணி எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல், இந்தியாவுக்கு பாதுகாப்பாக பயணம் செய்து உலகக்கோப்பை தொடரில் எப்படி விளையாட முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதாக இருந்த போட்டிகள் அனைத்தையும் இலங்கைக்கு மாற்றும்படி ஐஐசியிடம் முறையிடும்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை அறிவுறுத்தி இருப்பதாகவும் ஆசிஃப் நஸ்ரூல் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணியும் இந்தியாவில் விளையாடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பிப்ரவரி 7, 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் வங்கதேச அணி முறையே மேற்கிந்திய தீவுகள், இத்தாலி, இங்கிலாந்து அணிகளுடன் மோதும் போட்டிகள் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் வங்கதேச அணி நேபாளத்துடன் மோதும் போட்டி, பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது அண்மை காலமாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் மரணங்கள் குறித்து பிசிசிஐ சில தினங்களுக்கு முன் கவலை தெரிவித்திருந்தது. அத்துடன், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 9.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்த வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தது.
பிசிசிஐ-யின் இந்த கோரிக்கையை ஏற்று, முஸ்தபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிப்பதாக கேகேஆர் அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் எதிரொலியாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்தியா செல்லமாட்டோம் என்று வங்கதேச அணி இன்று அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கு தடை?
இதனிடையே, இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்புக்கு வங்கதேசத்தில் தடை விதிக்குமாறு, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டிருப்பதாகவும் அந்நாட்டின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ரூல் கூறியுள்ளார்.