''பொறுப்பு டிஜிபி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது'' - அமைச்சர் ரகுபதி காட்டம்!
பொறுப்பு டிஜிபி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது என்றும், பொறுப்பு டிஜிபி என்பதை கொண்டு வந்ததே அதிமுக அரசு தான் என்றும் அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை, லேனா விளக்கு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு இயற்கை மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பணி நியமன ஆணைகள் வழங்கினார். இதன் பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகிற செய்திகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக ஒன்றிய அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்.
ஒன்றிய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ? அப்போதெல்லாம் குறுக்கே விழுந்து தமிழக அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டு சுமத்தி ஒன்றிய பாஜக அரசை காப்பாற்றி வருகிறார். இது, டிஜிபி விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய ஒன்றிய பாஜக அரசு, அது டிஜிபி மூலம் நடந்து விடாதா? என்று எண்ணினார்கள். ஆனால் டிஜிபி மூலம் நடக்க முடியவில்லை. பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். ஏன் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை? என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டிஜிபி என்று அறிமுகப்படுத்தியதே அதிமுக தான். கடந்த 2011 ஆம் ஆண்டு, ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி ஆகவும், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆகவும் அதிமுக அரசு தான் கொண்டு வந்தது.
ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டிஜிபியாக கொண்டு வந்ததும் அதிமுக தான். பொறுப்பு டிஜிபி என்பதை கொண்டு வந்த அதிமுக அரசு தற்போது பொறுப்பு டிஜிபி கொண்டு வந்ததை பற்றி பேசி ஒன்றிய அரசின் விசுவாசி அடிமை என்று எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக்கொண்டு வருகிறார். பொறுப்பு டிஜிபி பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. டிஜிபி பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மாநில அரசு விருப்பப்படி தான் டிஜிபி நியமனம் இருக்கும். அத்தகைய சூழல் தற்போது இல்லை. அதிமுக ஆட்சியில் சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தார்கள். மோடி அரசு காவிரி பிரச்சனை இருந்த போது அதிமுக அரசில் கர்நாடகாவை சேர்ந்தவரை தான் துணை வேந்தராக நியமித்தார்கள்.
அதேப்போல் ஒன்றிய பாஜக அரசின் ஆட்களை தான் டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது. தமிழ்நாடு அரசை புறக்கணித்து தனக்கு வேண்டிய ஒருவரை டிஜிபியாக ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது. இது தமிழ்நாடு மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் அபகரிக்கும் செயல். நாம் குடிமையை பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பற்றி எடப்பாடி பழனிசாமியும், மற்றவர்களும் கேட்கிறார்கள். சிபிஐ விசாரணைக்கு ஏன் தடை வாங்கினீர்கள்? என்று கேட்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையைவிட தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகவே விசாரிக்கும். இதற்கு பல முன் உதாரணங்கள் இருக்கிறது. இந்த வழக்கில் 27 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என்று கேட்கும் எடப்பாடி பழனிசாமி 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது? ஏன் நீதிமன்றத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்? உச்ச நீதிமன்றத்திற்கு சென்று ஏன் தடை வாங்கினார்? அப்போது சரியாக இல்லை. தற்போது சரியாக இருக்கிறதா சிபிஐ? சிபிஐ விசாரித்தால் நியாயம் கிடைக்கும். தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதில்லை. சிபிஐ கண்டு திமுக அரசு அஞ்சியது கிடையாது. கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட வேண்டும். போபால், ஆக்ரா, நாக்பூர் போன்ற நகரங்களுக்கு என்ன சட்டமோ? அதே சட்டம்தான் தமிழ்நாட்டிற்கும் இருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை தாருங்கள் என தான் கேட்கிறோம். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எஸ்ஐஆர் பற்றி திமுக பயப்படவில்லை. அவசரகதியில் செயல்படுத்தக்கூடாது என்று தான் கூறுகிறோம். பணிச்சுமையால் பல மாநிலங்களில் பிஎல்ஓக்கள் தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து 30 நாள் வேலை பார்ப்பதால் அலுவலகம் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்தம் பணிச்சுமை ஏற்படுகிறது.
பொது அவகாசம் தேவை. அவசரகதியில் எஸ்ஐஆர் கொண்டு வரக்கூடாது. அதில் நியாயம் கிடைக்காது என்று தான் கூறுகிறோம். தேர்தலுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம். இதில் ஏன் அவசரம்? ஆளுநர் விவகாரத்தில் மூன்றுதான். ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும் அல்லது அதை திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். இந்த மூன்று வாய்ப்பு தான் இருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் நாங்கள் செங்கலை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தாமதப்படுத்தி வருகின்றனர். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியை விட்டு யாரும் வெளியே செல்லமாட்டார்கள்'' என அமைச்சர் ரகுபதி கூறினார்.