கருர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்

கருர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை தவெக தலைவர் விஜய் ஆஜராகவுள்ளார். இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

பல லட்சம் பேர் கூடும் கூட்டத்துக்கு சிறிய இடம் வழங்கியதே இந்த சம்பவத்துக்கு காரணம் என தவெக தரப்பும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பல மணிநேரம் தாமதமாக விஜய் வந்ததே இந்த துயரத்துக்கு காரணம் என தமிழக அரசு தரப்பிலும் மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவர் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது அவர்களிடம் பல மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல ஆவணங்களும் சிபிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு கடந்த 6ஆம் தேதி சம்மன் அனுப்பட்டது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளார்.

இதற்காக, இன்று காலை 6.15 மணியளவில் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை விமான நிலையத்திற்கு 6.50 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்பட்டு செல்கிறார். காலை 9.30 மணியளவில் டெல்லி செல்லும் விஜய், அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் செல்லவுள்ளார்.

இதனிடையே, தவெக கோரிக்கையை ஏற்று விஜய்க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. விஜய்யை பார்ப்பதற்காக டெல்லியிலும் நூற்றுக்கணக்கானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டுள்ளன.