செல்போன் பயன்பாட்டை குறைக்க நூதன போட்டி; குவிந்த போட்டியாளர்கள்
இன்றைய நவீன வாழ்வில் செல்போன் என்பது உடலின் ஒரு பாகமாகவே மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, இடத்தை விட்டு நகராமல் பல மணி நேரம் செல்போனில் மூழ்கி கிடப்பவர்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது பெருமளவு அதிகரித்துவிட்டது.
அந்த வகையில், செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் கண் பாதிப்பு, உடல் சமநிலை பாதித்தல், தூக்கமின்மை என பெரியோர், சிறியோர் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் இந்த அதீத செல்போன் பயன்பாடு பாதிப்பை ஏற்படுத்தினாலும், யாராலும் செல்போனை பிரிந்து இருக்க முடியவில்லை என்பதே நிஜம். இவ்வாறு குடும்பத்தினருடனும், உறவினர்களுடன் நேரம் செலவழிக்காமல் செல்போனில் மூழ்கி கிடப்பவர்களை மீட்கும் முயற்சியாக பஞ்சாப் மாநிலத்தில் செல்போன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி செல்போனில் மூழ்கி கிடப்பவர்கள் அதிலிருந்து விடுபடவும், எவ்வளவு நேரம் ஒருவரால் செல்போன் இல்லாமல் இருக்க முடியும்? என்பதை அறியும் பொருட்டும் இந்த செல்போன் இல்லா நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் நடந்தியுள்ளனர். ஒரு போட்டியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பதிவு செய்து போட்டி நடைபெறும் அரங்கிற்குள் செல்லும் நபர்கள், தங்களின் செல்போன்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சிலர் குறுகிய நேரத்தில் செல்போனை பயன்படுத்தி போட்டியை விட்டு வெளியேறவும் செய்கிறார்கள். சிலர் செல்போன்களை மறந்து தங்களின் அன்றாட வேலைகளை அந்த அறையில் இருந்தே பார்க்கவும் செய்கிறார்கள்.

குறிப்பாக கைவினை பொருட்கள் செய்தல், பேப்பர் படித்தல், நாவல் வாசித்தல், சிறுவர்கள் பாடங்களை படித்தல் என அவரவர்களுக்கு பிடித்த வேலைகளை எவ்வித இடைஞ்சலும் இன்றி செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர் கமல்பிரீத் சிங் கூறுகையில், "மக்கள் தற்போது செல்போன் பயன்படுத்துவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிகத்துள்ளது. தங்கள் வேலைகளை கூட மறந்து செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். சிலர் சாப்பிட கூட செல்வதில்லை, உறவினர்கள் வீட்டுகளுக்கு வந்தால் கூட அவர்களிடம் நேரம் செலவழிக்காமல், சிலர் தங்களின் செல்போனில் நேரம் செலவிடுவதை நாம் அதிகம் பார்க்கிறோம். இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு இருக்கும் நேரத்தில் செல்போனை தூர வைத்து விட்டு தங்களுக்கு மனதுக்கு பிடித்த வேலைகளை போட்டிகளில் பங்கேற்கும் நபர்கள் செய்து வருகிறார்கள். சக மனிதர்களோடு கலந்து பேசுகிறார்கள். நிகழ்ச்சியை ஏற்படும் செய்யும் போது இது எப்படி நடக்கும்? மக்கள் போட்டியில் கலந்து கொள்ள முன் வருவார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு அதிகம் இருந்தது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அதிகம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்வந்தனர். இதன் மூலம் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நிறைவேறியுள்ளது" என்றார் முகம் நிறைய புன்கையுடன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இது தொடர்பாக கூறும் போது, "செல்போன்களை விலக்கி வைக்கும் போது நாம் நினைப்பதை திட்டமிட்டு எளிதாக செய்ய முடிகிறது. கவனக்குறைவு முழுவதும் குறைந்து, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் மனம் நாட்டம் செலுத்துகிறது. இது இங்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். செல்போன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நிச்சயம் உதவுகிறது" என்றார்.