ஓடும் ரயிலில் மொபைல் போனை தவறவிட்டு அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம்; ஆர்.பி.எப்., எச்சரிக்கை
'ஓடும் ரயிலில் மொபைல் போனை தவற விட்டால், அபாய சங்கிலியை இழுக்கக்கூடாது. மீறி இழுத்தால் அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படையான, ஆர்.பி.எப்., எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆர்.பி. எப்., உயர் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியர், மொபைல் போனை அதிகம் பயன் படுத்துகின்றனர். இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு, ரயில்களில் சிக்குவது, தண்டவாளத்தில் தவறி விழுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
பதற்றம் இதேபோல, ஓடும் ரயிலில் சிலர் மொபைல் போனை தவற விடுகின்றனர். பர்ஸ், மொபைல் போன் அல்லது வேறு ஏதேனும் பொருள் கீழே விழும் போது, பயணியர் முதலில் பதற்றப்படக் கூடாது.
பொருள் விழும் இடத்தை குறித்துக் கொண்டு, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படைபோன்றோரிடம் தெரிவிக்க வேண்டும். ரயிலில் அபாய சங்கிலியை இழுக்கக்கூடாது.