ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

இந்​தி​யா​வுட​னான 2-வது மற்​றும் கடைசி கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 248 ரன்​களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்​றது. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய அந்த அணி​யின் வீரர்​கள் ஷாய் ஹோப், ஜான் கேம்ப்​பெல் ஆகியோர் அரை சதமடித்து களத்​தில் உள்​ளனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் வெற்​றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் கடந்த 10-ம் தேதி தொடங்​கியது. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 518 ரன்​கள் எடுத்து டிக்​ளேர் செய்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வல் 175, கேப்​டன் ஷுப்​மன் கில் 129 ரன்​கள் எடுத்​தனர். இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 4 விக்​கெட் இழப்​புக்கு 140 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 3-ம் நாள் ஆட்​டத்தை ஷாய் ஹோப் 31 ரன்​களு​ட​னும், டெவின் இம்​லாக் 14 ரன்​களு​ட​னும் தொடர்ந்​தனர். ஆனால், குல்​தீப் சிங், சிராஜ், பும்​ரா​வின் சிறப்​பான பந்​து​வீச்​சால் அந்த அணி 81.5 ஓவர்​களில் 248 ரன்​களுக்​குச் சுருண்​டது. ஷாய் ஹோப் 36, டெவின் இம்​லாக் 21, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 17, கேரி பியரி 23, வாரிக்​கன் 1, ஆன்​டர்​சன் பிலிப்க் 24, ஜெய்​டன் சீல்ஸ் 13 ரன்​கள் எடுத்​தனர்.

இந்​திய அணி தரப்​பில் குல்​தீப் யாதவ் 82 ரன்​கள் கொடுத்து 5 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். ரவீந்​திர ஜடேஜா 3, பும்​ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். இதன்​மூலம் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 270 ரன்​கள் முன்​னிலை பெற்​றது.

இதையடுத்து ஃபாலோ-ஆன் பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது 2-வது இன்​னிங்ஸை தொடர்ந்து விளை​யாடியது. 2-வது இன்​னிங்​ஸின்​போது டேஜ்நரைன் சந்​தர்​பால் 10 ரன்​களில், சிராஜ் பந்​தில் ஷுப்​மன் கில்​லிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அலிக் அத்​த​னாஸ் 7 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் வாஷிங்​டன் சுந்​தர் பந்​து​வீச்​சில் போல்​டா​னார். ஆனால் 3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த ஜான் கேம்ப்​பெல்​லும், ஷாய் ஹோப்​பும் நிதான​மாக விளை​யாடி ஸ்கோரை உயர்த்​தினர். இரு​வரும் அரை சதத்​தைக் கடந்த நிலை​யில் இந்​திய பந்​து​வீச்​சாளர்​களை சோதித்​தனர்.

3-ம் நாள் ஆட்​டநேர இறு​தி​யில் கேம்ப்​பெல் 87 ரன்​களும், ஷாய் ஹோப் 66 ரன்​களும் எடுத்து களத்​தில் இருந்​தனர். அந்த அணி 49 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 173 ரன்​கள் எடுத்​துள்​ளது. இந்​திய அணி தரப்​பில் சிராஜ், வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். 97 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள நிலை​யில் இன்று 4-ம் நாள் ஆட்​டத்தை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தொடர்ந்து விளை​யாட உள்​ளது.