பவுலிங்கிலும் பட்டையை கிளப்பிய மார்கோ ஜான்சன்; 201 ரன்னில் ஆல் அவுட்டானது இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 201 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக சேனுரன் முத்துசாமி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 109 ரன்களையும், சதத்தை நெருங்கிய மார்கோ ஜான்சன் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் -யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து ஜெய்ஸ்வால் 7 ரன்களுடனும், ராகுல் 2 ரன்களுடனும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த முதல் விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், கேஎல் ராகுல் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 58 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷன், துருவ் ஜூரெல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 122 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
அதபின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் 19 ரன்களிலும், ஜஸ்பிரித் பும்ரா 5 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 201 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் காரணமாக இந்திய அணி ஃபாலோ ஆன் ஸ்கோரை கூட எடுக்க தவறியது. இருப்பினும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
அணியின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஐடன் மார்க்ரம் 12 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 13 ரன்களையும் சேர்த்துள்ளனர். இதனையடுத்து 314 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்க அணி நாளை 4-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.