பாம்புகடியில் இருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய பெண் - வைரலாகும் சிசிடிவி காட்சி
காட்பாடியில் பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு கடியில் இருந்து நொடிப் பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
காட்பாடி நகராட்சி செல்வம் நகர் பகுதியில் டாக்டர் ஜானகி என்பவரின் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று (ஜன.23) மதிய உணவு இடைவேளையின் போது, அங்கு பணியாற்றி வந்த பெண் தொழிலாளி ஒருவர், களைப்பு காரணமாக அருகிலுள்ள டாக்டர் ஜானகியின் வீட்டின் வராண்டாவில் படுத்து ஓய்வெடுத்துள்ளார்.
அவர் உறங்கி இருந்த சமயத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அவரை கடிக்க முயன்றுள்ளது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விழித்துக்கொண்ட பெண் தொழிலாளி, அருகே பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் பணியாற்றி வந்த மற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் உடனே அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் பாம்பு அந்த இடத்தை விட்டுச் சென்றது.
அவர்களை கண்டதும் பாம்பு அந்த இடத்தை விட்டுச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பு கடியிலிருந்து தப்பிய பெண்மணி கூறுகையில், "மதிய நேரத்தில் உடல் களைப்பாக இருந்ததால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஏதோ அசைவது போல் உணர்ந்து கண் திறந்து பார்த்த போது, என் அருகே பெரிய பாம்பு ஒன்று இருந்ததைப் பார்த்து உயிரே போய்விட்டது. அப்போது அக்கம் பக்கத்தினரை அழைப்பதற்காக அலறினேன். உடனே சக தொழிலாளர்கள் ஓடி வந்து என்னை காப்பற்றினர். அதற்குள் அந்தப் பாம்பு ஓடி மறைந்துவிட்டது” என தெரிவித்தார்.