வைகோ நடைபயணத்தை புறக்கணித்த காங்கிரஸ்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைபயண தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றிருந்ததால் இவ்விழாவில் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
போதை பொருட்களுக்கு மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், தமிழ்நாட்டில் சாதி, மத மோதல் இருக்கக்கூடாது என வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2026 இல் தொடரவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து இன்று சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார்.
தென்னூர், உழவர் சந்தை மைதானத்தில் இருந்து வைகோவின் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் விழாவில் அவர் ஆற்றிய உரையின்போது, திராவிட இயக்கத்தை பொறுத்தவரை இளைய தலைமுறை நலனுக்காக எதிர்காலத்தின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக செயலாற்றி கொண்டு இருக்கின்ற இயக்கம் திமுக. பெரியார், கருணாநிதி போன்றவர்கள் கட்டிக்காத்த திராவிட யுனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ. அதே யுனிவர்சிட்டி மாணவன் தான் நான்.
வைகோ, கருணாநிதியிடம் இருந்து அரசியல் கற்றுக் கொண்டவர். கலைஞர் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நடைபயணம் நடத்தியபோது, கருணாநிதிக்கு பாதுகாவலராக கூடவே நடந்து சென்றவர் வைகோ.
இன்று சமத்துவ நடைபயணத்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களோடு அவர் நடத்துகிறார். நடைபயணத்தில் பங்கேற்கும் இளைஞர்களை அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் தேர்ந்தெடுத்துள்ளார் வைகோ. போதை பொருள்கள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான கருத்துக்களை வலியுறுத்தி வைகோ துவங்கியுள்ள சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று ஸ்டாலின் வாழ்த்தினார்.

ஓரளவுக்கு தடுத்துள்ளோம்
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கக்கூடிய போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை காக்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் போதைப்பொருள்கள் புழக்கத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை. ஓரளவுக்கு தடுத்துள்ளோம். போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து அதனை கைவிட வேண்டும்.
போதைப்பொருள்கள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை தடுக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். ஏராளமான போதை வஸ்துக்கள் நாட்டுக்குள் வருகின்றன. துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள்கள் வருவதை நாம் செய்திகளாக அறிகிறோம். மாநிலம் விட்டு மாநிலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்.
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களாக இருக்கின்றனர். நைஜீரியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நெட்வொர்க்கை ஒழிக்க நாம் எல்லோரும் கைகோர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் லிடுத்தார்.
சிறுபான்மையினர் அச்சத்தில் வாழும் நிலை
நாட்டில் இருக்கும் முக்கிய பிரச்சனை சாதி, மத மோதல். மத்திய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் இப்போது வெறுப்பு பேச்சுகளை பேசி, இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் விதமாக செயல்படுவதை பார்க்கிறோம்.

நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அச்சத்தில் வாழ்கின்ற சூழல் உருவாகியுள்ளது. அண்மையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை பற்றி தெரியும். கடந்த காலங்களில் இதுபோல் இல்லை. ஒன்றாக இருந்தவர்களை பிளவுப்படுத்தும் சக்தியாக சிலர் இருக்கின்றனர். அன்பு செய்ய பயன்படுத்தும் ஆன்மீகத்தை சிலர் வம்பு செய்ய பயன்படுத்துகின்றனர்.
திராவிட இயக்கத்திற்கு பல்வேறு திருப்புமுனை கொடுத்தது திருச்சி தான். வைகோ நடைபயணம் நிச்சயமாக புதிய வரலாற்றை படைக்கும். மதுபோதையை விட ஆபத்தானது மதவாத அரசியல் போதை. இரண்டையும் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுக்க நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
விழா நாயகரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, "கடந்த 1938 ல் இந்தி திணிப்புக்கு எதிரான எனது நடைபயணம் திருச்சியில் இருந்து துவங்கியது. அதனை பெரியார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். அதே திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
சனாதன கூட்டத்தால் சமய நல்லிணக்கம் பாழ்பட்டு போகுமோ என்கிற சூழலில் டெல்லி அடிவருடிகள் ஜாதி, மதத்தின் பெயரால் மோதல் உருவாக்க துடிக்கிறார்கள். வடமாநிலத்தில் மோதல்கள் இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். தமிழ்நாட்டில் ஜாதி, சமய, மத பூசல்களுக்கு இடம் இல்லை என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொற்கால ஆட்சி தொடர திமுக கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளோம்" என்று வைகோ பேசினார்.
இந்த விழாவில் மதிமுக நிர்வாகிகள் அழைப்பை ஏற்று விசிக, மநீம உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், ஐ.யூ.எம்.எல். தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
1000 பேர், 10 நாள்கள்
மணப்பாறை, திண்டுக்கல் வழியாக மதுரையில் வரும் 12 ஆம் தேதி நிறைவு பெறும் வகையில் இந்த சமத்துவ நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 190 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதிமுக தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் பழைய திரைப்பட பாடல்களும், அன்றாடம் இரவு தங்குமிடங்களில் ஒளிபரப்ப 12 கருத்துள்ள திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
காங்., புறக்கணிப்பு
வைகோவின் நடைபயணத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நடைபயண துவக்க விழா அழைப்பிதழின் முன்அட்டையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று அக்கட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.